அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்த தொகுதியான கலபுர்கியில் இருந்து தனது பிரச்சாரத்தை பிரதமர் தொடங்குகிறார். பிற்பகல் 2 மணிக்கு மாவட்டத் தலைமையகமான என்வி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
கடந்த இரண்டு முறை கலபுராகி (குல்பர்கா மக்களவைத் தொகுதி)யைப் பிரதிநிதித்துவப்படுத்திய கார்கே, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இது அவர் சந்தித்த முதல் தோல்வி. அந்தத் தொகுதியில் ஜாதவை பாஜக மீண்டும் களம் இறக்கியுள்ளது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பதிலாக அவரது மகனை காங்கிரஸ் களம் இறக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மார்ச் 18 ஆம் தேதி, பாஜக மூத்த தலைவர் பி எஸ் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிவமொக்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
எடியூரப்பாவின் மகன் பி ஒய் ராகவேந்திரா இந்த தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். மொத்தம் 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.