நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தேசிய நலன் மற்றும் மக்கள் நலன் கருதி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.