நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதனைத்தொடரந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அன்புமணி, மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறோம்.நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அண்ணாமலை, மோடியின் கரத்தை வலுப்படுத்த பாஜகவுடன் இணைந்துள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு நன்றி. இது வலுவான கூட்டணி.இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள். 2026ஆம் ஆண்டு அனைவரும் நினைக்கும் மாற்றம் வரும். மோடியின் மேடையில் ராமதாஸ், அன்பு மணி ராமதாஸ் அமர வேண்டும். 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும் என அண்ணாமலை தெரிவித்தார்.