இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, தனது பதவி மற்றும் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடைய திடீர் அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் மகன் லியோ வரத்கார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை அயர்லாந்தின் பிரதமராக பதவி வகித்தார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் முதன்முதலில் பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார். இவருடைய தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர். தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், அவர் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஒருஅங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் லியோ வரத்கார் விலகியுள்ளார்.
தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக லியோ வர்த்கார் தெரிவித்துள்ளார்.