நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் கோடீஸ்வரா்களுடன் சோ்ந்து பிரதமா் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்தார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள், தேர்தல் குழுவிடம் ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வருவதாக குற்றம்சாட்டினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டதாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.