மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்து, அது சிறுத்தையின் கால்தடம் என்பதை உறுதி செய்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும், சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்தால், 9360889724 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 10 குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.