பாஜக நிறுவன நாளை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது : “நாட்டில் அனைத்துக் கட்சிக் காரியகர்த்தாக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக கட்சியை கட்டியெழுப்பிய அனைவரின் கடின உழைப்பு, போராட்டங்கள் மற்றும் தியாகங்களை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். ‘தேசம் முதலில்’ என்ற முழக்கத்துடன் எப்போதும் பணியாற்றும் இந்தியாவின் விருப்பமான கட்சி நாம் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும்.
தேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களின் அடையாளமாக இருந்த ஊழல், குரோதம், ஜாதி வாதம், வகுப்புவாதம், வாக்கு வங்கி அரசியலில் இருந்து இந்தியாவை பாஜக விடுவித்துள்ளது. இன்றைய இந்தியாவில், வளர்ச்சியின் பலன்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஏழைகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பாஜக நல்லாட்சியை மறுவரையறை செய்துள்ளது. எங்களது திட்டங்களும், கொள்கைகளும் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பலத்தை அளித்துள்ளது. பல தசாப்தங்களாக விளிம்பில் விடப்பட்டவர்கள் எங்கள் கட்சியில் குரலையும் நம்பிக்கையையும் கண்டனர். ஒவ்வொரு இந்தியனுக்கும் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வளர்ச்சியை வழங்குவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மீண்டும் ஒரு முறை மக்களின் ஆதரவை பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.