நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து, பாரதப் பிரதமர் மோடி வரும் 9, 10 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர், கேராளாவில் இருந்து திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அடுத்து, கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனைத்தொடர்ந்து, விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார். நிறைவாக திருச்சியில், பாஜக கூட்டணி அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாகனப் பேரணியில் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். இன்று இரவு தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்யும், ஜே.பி.நட்டா திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.