மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் திட்டத்தை தயாரிக்க அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன் கீழ், ரயில்வே அமைச்சகம் ஒரு முழுமையான திட்டத்தை தயாரித்துள்ளது. அதில், அடுத்த 100 நாட்களில் வந்தே பாரதில் ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை எளிதாக்குவது உட்பட என்னென்ன புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் முழுமையான திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்குள் பயணிகளுக்காக ‘பிஎம் ரயில் யாத்ரி பீமா யோஜனா’ தொடங்குவதை இந்திய ரயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ், ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.
நாட்டில் 40,900 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று பொருளாதார வழித்தடங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். இந்த பொருளாதார வழித்தடங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்.
ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்த பிறகு பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான சிக்கல்களை நீக்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. டிக்கெட்டை ரத்து செய்தால், 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் கொண்டுவரப்படும்.
இந்திய ரயில்வேயால் ஒரு செயலி தொடங்கப்படும். இதன் மூலம், பயணிகள் ரயில் நிலையைக் கண்காணிக்க முடியும். இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, ஒரே இடத்தில் ரயில்வே தொடர்பான மற்ற வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை முடித்த பிறகு, இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில், செனாப் ஆற்றின் மீது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ‘செனாப் பாலம்’ மற்றும் இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் பாலம் ஆகியவை உள்ளன.
இந்திய ரயில்வேயும் இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு பாலத்தை செயல்படுத்த விரும்புகிறது. இந்தப் பாலத்தின் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ராமேஸ்வரம் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1913-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்ததால், மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவைகள் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் முன்மாதிரி தற்போது பெங்களூரில் BEML ஆல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. 508 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் பிரிவில் ஏப்ரல் 2029-க்குள் சுமார் 320 கிமீ பாதையில் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.