அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை பாஜக மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் பாஜக வேட்பாளர் ராகவ் லக்கன்பாலுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார்.
அப்போது, சில ஆண்டுகளுக்கு முன், அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு போகும்போது பொய் பேசுவதாக ஒரு கருத்து இருந்தது. பொதுமக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை என்ற கருத்தும் நிலவியது.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்து விடுகின்றன. அந்த எண்ணத்தை பாஜக மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதாக உறுதியளித்தோம். ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்தோம். முத்தலாக்கை ஒழிப்பதாக நாங்கள் வாக்குறுதி அளித்துவிட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தவுடன் அதை செய்தோம்.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 46 நாட்களுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட எட்டு இந்தியக் கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்தது.
ஒரு காலத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்த நாடாக இந்தியா இருந்தது. ஆனால் இன்று பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம்.
சமாஜ்வாடி கட்சி நாளுக்கு நாள் வேட்பாளர்களை மாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட ஆட்கள் கூட கிடைக்காத நிலை உள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.