கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறி விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜேஷ் மிஸ்ராவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மக்களை பிரித்து வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அவர், சாதி, சமூகம் அடிப்படையில் காங்கிரஸ் அரசு அமைத்ததாகவும் சாடினார்.
ஆனால் கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறிவிட்டது என்றும், மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்றும், சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் பிளவுபடுவதில்லை என்றும் நட்டா கூறினார்.
வரையறை மாறிவிட்டதால் வாக்கு வங்கி மூலமாகவோ, மக்களை ஏமாற்றுவதன் மூலமாகவோ இனி அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 28 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.