கர்நாடக பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவருடன் படித்த ஃபயாஸ் (25) நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட் இல்லத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்று, அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜே. பி. நட்டா,
நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டது, அதிர்ச்சிகரமான சம்பவம் இதை கண்டிக்கிறோம்… இந்த சம்பவம் குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வராவின் கருத்து ஆட்சேபனைக்குரியது. அவர்களின் அறிக்கைகள் விசாரணையை நீர்த்துப்போகச் செய்கின்றன. தற்போதைய அரசை திருப்திப்படுத்தும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் விடமாட்டார்கள்.
மாநில காவல்துறையால் விசாரணை நடத்த முடியாவிட்டால், மாநில அரசு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட், மாநில காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை குறைவாக இருப்பதால், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார் எனத் தெரிவித்தார்.