ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் ஒரு அறையில் மணல் கொட்டுவது போல் கொட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அலாம்கிரின் தனி செயலாளருடைய உதவியாளர் சஞ்சீவ்லால். இவரது வீட்டில் வருமான வரிக் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான பணம், அமலாக்கத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் விரைவில் எண்ணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம், அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் ஜார்கண்ட், பீகார் மற்றும் டெல்லியில் உள்ளபல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, பணமோசடி செய்ததாக வீரேந்திர கே. ராமை, சட்ட விரோத பணபரிமாற்ற மோசடி வழக்கில் 2023ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி கைது செய்தது.
வீரேந்திர ராம் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக , ஜார்க்கண்டின் ராஞ்சியில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை மேற்கொண்டது.
இதில், அமைச்சரின் தனிச்செயலாளரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் அலாம்கிரின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ் லாலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் அறையில் பணம் கொட்டி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரதுஷ் கூறும் போது, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தை கொள்ளையடித்து விட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மணிலா அரசும் , ஆளும் கட்சி அமைச்சர்களும் எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.