புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கு செலவுக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத் குமார், சதீஷ் குமார், தசரதன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு பாஜக பிரமுகர் செந்தில்குமாரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தம், ராஜா மற்றும் சிவசங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வழக்கு செலவுக்காக ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவும், சிறையில் உள்ளவர்களிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கஞ்சா வாங்க பணம் கொடுத்து உதவிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
















