தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழ்நாட்டிற்கு மே மாதம் தர வேண்டிய 10 டிஎம்சி நீரில், 3 புள்ளி 8 டிஎம்சி நீர் மட்டுமே கர்நாடகா தந்துள்ளதால், எஞ்சிய 6 புள்ளி 2 டிஎம்சி நீரை கர்நாடக திறந்து விட உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லை என கூறிய கர்நாடக அரசின் கோரிக்கையை ஒழுங்காற்று குழு நிராகரித்து, 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட பரிந்துரைத்துள்ளது. அடுத்த கூட்டம் வரும் மே 30ஆம் தேதி நடைபெறும் என காவிரி ஒழுங்காற்று குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பங்கேற்கக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், காணொலி வாயிலாகவும் நேரிலும், வலுவான வாதங்களை முன்வைத்து வருவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.