சென்னை ஆவடி அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைக் கடத்தி வந்துவிட்டு, தப்பியோடி தலைமறைவான மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார்களை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றுள்ளன.
இதனையடுத்து அவற்றை விரட்டிச் சென்ற போலீசார், 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளசேரி அணுகு சாலையில் கார்கள் மட்டும் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
அப்போது கார்களுக்குள் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிலோ கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவை சேர்ந்த நாகமல்லீஸ் வர ராவ், தன்ராஜ் மற்றும் நானி ஆகிய மூவரை கைது செய்தனர்.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட கஞ்சாவை, சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு விநியோகம் செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.