நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் சிறையிலிருந்தபடியே வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் தீவிரவாதியின் மகன் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
14 மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் சார்பு பிரிவின் தலைவரான அம்ரித்பால் சிங், பஞ்சாபில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தப்பியோடிய அவரை 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அமிர்த் பால் சிங், அசாமின் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2700 கிலோமீட்டர் தொலைவில் அசாம் சிறையில் இருந்தபடியே அம்ரித்பால் சிங் பஞ்சாபில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்பிர் சிங் கை விட 1 லட்சத்து 97 ஆயிரத்து 120 வாக்கு வித்தியாசத்தில் 4 லட்சத்து 4430 வாக்குகள் பெற்று அமிர்த் பால் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
அம்ரித்பால் சிங் மீது பஞ்சாபின் பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள அமிர்த் பால் சிங்குக்கு ஆதரவாக அவரது பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
போதைப்பொருள் பிரச்சனை மற்றும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்தே தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.
காலிஸ்தான் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கவனமாக பிரச்சாரம் செய்த நிலையில் அமிர்த் பால் சிங் வெற்றிபெற்றிருக்கிறார்.
அதே போல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலைக் குற்றவாளியின் மகனான சரப்ஜீத் சிங் கல்சா, ஃபரித்கோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங்கை விடவும் 70,053 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
பஞ்சாபின் ஃபரித்கோட் தொகுதியில் போட்டியிடும் சரப்ஜீத் சிங் கல்சா தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை அல்ல.
2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியிலும் , 2007 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்ற கல்சா இம்முறை வெற்றிபெற்றுள்ளார்.
இவரது தாயார் , ஏற்கெனவே 1989ம் ஆண்டு ரோபார் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறையில் இருந்தபடியே காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் 4 லட்சத்து 72481 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவை கிட்டத்தட்ட 2 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துளளார் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத்.
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டில் தேச விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத்துக்காக அவரது மகன்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தந்தையை வெற்றிபெற செய்துள்ளனர்.
சீக்கியர் பிரச்னைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்த சரப்ஜீத் சிங் கல்சாவும், போதைப்பொருள் பிரச்சனைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்த அமிர்த் பால் சிங்கும், காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்து பிரச்சாரம் செய்த ஷேக் அப்துல் ரஷீத் ஆகிய மூவரும் சுயேட்சைகளாக வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தல் வெற்றி அம்ரித்பால் மற்றும் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகிய இருவரையும் சிறையில் இருந்து வெளியே வர அனுமதியளிக்குமா ? என்பது இன்னும் தெரியவில்லை.
பொதுவாக , கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றால், நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் என்றும், சிறையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது உதவி ஆணையர் பொறுப்பிலான காவல்துறை அதிகாரிகள் உடன் செல்லவேண்டும் என்றும், நாடாளுமன்றஅதிகாரிகள் மற்றுமு் சக உறுப்பினர்கள் தவிர பிறரை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றதால், அமிர்த் சிங் பால் மற்றும் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் மிதவாத அரசியலை கடைபிடிப்பார்களா ? அல்லது தீவிரவாதத்தை ஆதரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படி தீவிரவாதிகள் ஜனநாயக ரீதியில் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று, முன்னாள் காவல் துறை தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.