காலிஸ்தான் ஆதரவு சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்ய சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தாவை , அமெரிக்காவுக்கு செக் குடியரசு நாடு கடத்தியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்து தொகுப்பு.
இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள ‘சீக்கியருக்கான நீதி’ என்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து பிரிந்து சீக்கியர்களுக்கான தனிநாடு காலிஸ்தான் அமையவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இந்த தீவிரவாத அமைப்பின் தலைவராக, குர்பத்வந்த் சிங் பன்னூன் இருந்து வருகிறார்.
அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை வைத்துள்ள இவர், தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும் இந்தியாவுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அரசால் தீவிரவாதி என்று அறிவிக்கப் பட்டுள்ள குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இந்தியாவைச் சேர்ந்த 52 வயதான நிகில் குப்தா மீது அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டி இருந்தது.
இந்திய அரசு அதிகாரி ஒருவருடன் இணைந்து நிகில் குப்தா இந்த சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க வழக்கறிஞர்களால் குற்றம் சாட்டப் பட்டுள்ள இவர், 2023 ஆம் ஆண்டு செக் குடியரசால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப் படுவதற்கு தடை கேட்டு , நிகில் குப்தா , ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப் பட்டநிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவற்காக , செக் குடியரசு நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி யுள்ளது. இந்த செய்தியை federal bureau of prisons இணைய தளம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க நீதித்துறை கருத்து தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த குப்தாவின் வழக்கறிஞர் ஜெஃப்ரி சாப்ரோவும் கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டு, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு ஈடுபட்டதாக கனடா நாடாளுமன்றத்திலேயே குற்றஞ்சாட்டினார். இந்திய அரசு அதற்கு உடனடியாக கடுமையான மறுப்பு தெரிவித்தது.
அடுத்து, பன்னுனைக் கொல்ல இந்திய அரசு அதிகாரியுடன் சேர்ந்து நிகில் குப்தா சதித்திட்டத்தைத் திட்டியதாக, அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டிய உடனேயே, இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முறைப்படி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.
தொடர்ந்து, பன்னூன் கொலை செய்ய தீட்டிய சதி வழக்கில், இந்தியாவின் விசாரணை திருப்தி அளிப்பதாக வெளிப்படையாக அமெரிக்க அரசு தெரிவித்தது.
இதற்கிடையே, பிறநாடுகளில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிரான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து இந்தியா தொடர்ந்து சர்வதேச அரங்கில் கேள்வி எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.