பெங்களூருவை சேர்ந்த 12 வயதான சிறுமி கினா காரே உலகின் இளம் மாஸ்டர் ஸ்கூபா டைவர் என்னும் சாதனையை படைத்துள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…!
நீருக்கடியில் புகைப்படம் எடுப்பது, சிறப்பு நைட்ராக்ஸ் டைவிங் செய்வது, நீரில் முறையான மிதப்பதில் கட்டுப்பாடு நீரில் மூழ்கியவரை மீட்கும் முயற்சியில் சிறந்த தேர்ச்சி மற்றும் பல்வேறு சிறப்பு நிலை பயிற்சிகளில், முதன்மை பெறுபவர்களுக்கு ‘ மாஸ்டர் டைவர்’ என்ற அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். டைவிங்கில், தன் அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இளம் டைவர்ஸுக்கு வழங்கப்படுகிறது.
இந்த உயரிய பட்டம் தான் பெங்களூரூவைச் சேர்ந்த கினா காரே என்ற 12 வயது சிறுமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
10 வயதில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் முதல் டைவிங் செய்த கினா காரே, டைவிங் மீதான ஆர்வம் காரணமாக , தாய்லாந்து, பாலி மற்றும் மாலத் தீவுகள் உட்பட உலகமெங்கும் பல்வேறு இடங்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.
தண்ணீரை தனது இரண்டாவது வீடாக கருதும் கினாவை ஒரு நீர்க்குழந்தை என்று சொல்லும் அவளது தாயார் அன்ஷுமா, தொடக்கத்தில் தயக்கமாக இருந்தது என்றும், முறையான பாதுகாப்பு பின்பற்றப்படுகிறதா என்றும் உறுதி செய்து கொண்ட பிறகு கினாவை டைவிங் செய்ய அனுமதித்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.
அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், உணவு மற்றும் தூக்க அட்டவணைகளையும் தமது தந்தையே கவனித்து கவனித்துக்கொள்வதாக கூறும் கினா, கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் கடல் சுற்றுசூழல் பற்றியும் படிக்க விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும், ஒருமுறை சவாலான வானிலை நிலவிய போது, அந்தமான் கடலில் கடும் புயலில் சிக்கி மயக்கமடைந்த சக டைவரைக் காப்பாற்றி 20 மீட்டர் தொலைவில் இருந்த படகுக்குக் கொண்டு சென்றது சிலிர்ப்பான அனுபவம் என்று தெரிவித்திருக்கும் கினா காரே, டைவிங் அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறுகிறார்.
சவாலான டைவிங் துறையில் சாதித்து, உலகின் இளம் பெண் மாஸ்டர் டைவரான கினா காரே, உலகில் முடியாதது எதுவுமில்லை. உங்கள் கனவுகளை மட்டும் பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறார்.