டாஸ்மாக் மதுபான கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2021-2022-ம் நிதி ஆண்டில் வணிக வரிகள், பதிவுத்துறை மற்றும் உள்துறை ஆகியவற்றின் வரவு – செலவினங்கள் குறித்த இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில், டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை கொள்முதல் செய்ததில், வெளிப்படைத்தன்மை இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில ஏலத்தாரர்களே எல்லா குத்தகைகளிலும் மீண்டும் மீண்டும் பங்குபெற்றுள்ளதாகவும், ஏலமுறை வெளிப்படையாக இல்லாததோடு, போட்டியை ஊக்குவிப்பதாக இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பணமற்ற பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் பிஓஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதனை தணிக்கை செய்தபோது மொத்தமுள்ள 5 ஆயிரத்து 259 கருவிகளில் 3 ஆயிரத்து 114 கருவிகள் மட்டுமே செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மீதான புகார்களில் அதிகமான புகார்கள், கடைகளில் கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது என்பதுதான் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்உற்பத்தியாளர்களிடம் பாரபட்சம் காட்டாமல் சமச்சீராக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், தகுதியில்லாத ஏலதாரர்களுக்கு டெண்டர் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.