வேலை வாய்ப்புகளை உருவாக்க போராடும் இந்தியா என்ற சிட்டிகுரூப்பின் அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையும் தரவுகளையும் சிட்டிகுரூப் கணக்கிடத் தவறிவிட்டதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.
அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
சிட்டி குரூப்பின் பொருளாதார வல்லுனர்களான (Samiran Chakraborty) சாமிரன் சக்ரவர்த்தி மற்றும் (Baqar Zaidi) பக்கார் ஜைதி சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் 7 சதவீத வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு எட்டிலிருந்து ஒன்பது மில்லியன் வேலை வாய்ப்புக்களை மட்டுமே இந்தியாவால் உருவாக்க முடியும் என்று கூறியிருந்தனர்.
பொய்யான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இந்தியாவின் வேலை சூழ்நிலையைச் சிதைக்கும் விதமாக, ஆதாரமின்றி வெளியிடப்படும் அறிக்கைகள் வெளியிடுவோரை மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
மேலும், Periodic Labour Force Survey எனப்படும், ‘காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மற்றும் capital, labour, energy, materials and service அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் K.L.E.M.S தரவுகள் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களை கணக்கில் எடுக்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற கணக்கில், 2017-18 முதல் 2021-22 வரை 8 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் வேகமாக குறைந்து வருவதாக கூறியுள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உற்பத்தி, சேவைகள், உள்கட்டமைப்பு மிக வேகமாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா மூலமாக வேலை மற்றும் சேவைகளில் வேலை வாய்ப்புக்கள் கணிசமாக உயர்ந்து வருகிறது. EPFO மற்றும் NPS தரவுகளும் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.
இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி வெளிவந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் , 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் 46.7 மில்லியன் வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பு 643.3 மில்லியனாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.