சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருந்த 200 ஆண்டுகள் பழமையான செல்வ சுந்தர விநாயகர் கோயில் எங்கே போனது? கோயிலில் இருந்த சிலை மாயமானது எப்படி?…என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது தனியார் ஆக்கிரமிப்புகளிடம் இருந்து காணாமல் போன கோயில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
சென்னை பாரிஸ் அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் இருந்த செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை காணவில்லையாம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது பமை வாய்ந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில் . குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, என்.எஸ் கிருஷ்ணா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் படப்பிடிப்புக்கு முன்னால் இந்த கோவிலில் பூஜை செய்வது வழக்கமாம்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில், தனியார் ஆக்கிரமிப்பின் காரணமாக மாயமாகிவிட்டது. கோயில் குளத்தையும் காணவில்லை. 14.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கோயில், தனியாரின் ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி இருக்கிறது. இந்த கோவிலில் பழமையைப் பற்றியும், தற்போதைய நிலையைப் பற்றியும் விவரிக்கிறார் அப்பகுதியில் 50 ஆண்டுகளாக வசிக்கும் ஜெயராமன்.
செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, முறையாக பராமரிக்ககோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கோயிலின் பஞ்சலோக சிலை இந்து சமய அறநிலையத்துறை இடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கோயிலை கட்டிய பிறகு மீண்டும் அந்த சிலை கோயிலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயிலை மீட்டு தருவதோடு கோயில் குளத்தையும் மீட்டு தர வேண்டும் என்கிறார் சிறுவயதிலிருந்து செல்வ சுந்தர விநாயகரை வழிபடும் முந்தரா.
செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தில் மீண்டும் வழிபட அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், கோயிலுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.