வரும் 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் ரயில்வேத்துறையை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் அதிக பயணிகளை கையாளும் திறன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
2017-ஆம் ஆண்டு முதல் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. பொது நிதிநிலை அறிக்கையிலேயே ரயில்வே தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் 2024 – 2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
மோடி 3.0 அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்வு மற்றும் ரயில் பயணிகளை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.
2020-ஆம் ஆண்டுக்கு முன்பு மூத்த பெண் குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் 50 விழுக்காடு
தள்ளுபடியும், ஆண் மூத்த குடிமக்களுக்கும் திருநங்கைகளுக்கும் 40 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகை மீண்டும் வழங்கப்படலாம் எனத்தெரிகிறது. அனைவருக்கும் இல்லாமல் கேட்பவர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்படலாம் அல்லது இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள், 11 வகை நோயாளிகள், 8 வகை மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுவது போல் தங்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என மூத்த குடிமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல் பொதுப்பெட்டிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இடவசதியை அதிகரிப்பது, ரயில் விபத்துகளை தவிர்ப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனத்தெரிகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய ரயில் வழித்தடங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் இருப்புப்பாதைகளை மேம்படுத்துவது, ரயில் ஓட்டுநர் பணியில் உள்ள ஆள் பற்றாக்குறையைப் போக்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. மேலும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வந்தே பாரத் ரயில்களை அதிகப்படுத்துவது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.