தேர்தலின் போது பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பொழுது நெல்லை ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அவரது ஹோட்டல் நிர்வாகியான மணிகண்டன் மற்றும் நெல்லை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்தார் முரளிதரன் ஆகிய மூன்று பேரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரனிடம் கேட்கப்பட்டதாகவும், மேலும் தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,
சன் செய்திகளில் தவறான செய்திகளை ஒளிபரப்புவதாகவும், எத்தனையோ வழக்குகள் நாட்டில் இருக்கும் போது தொடர்ச்சியாக தவறான செய்தியை போடுவதன் காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.
கோவையில் காவல் ஆய்வாளர் என கூறி பெட்டி கடைக்காரரிடம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கியவரோடு எனது புகைப்படத்தை இணைத்து செய்தியாக போடுகிறார்கள். நல்ல செய்தியை சொல்ல வேண்டியதை விட்டு விட்டு தவறான செய்திகளை போட்டு வருகிறீர்கள். தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகள் நடந்து வருகிறது. அதை எந்த ஊடகமும் பெரிது படுத்துவது இல்லை. ஆனால் 4 கோடி ரூபாய் செய்தியை நான்கு மாதமாக போடுவதற்கு காரணம் என்ன.? என் மீது ஏதும் காழ்ப்புணர்ச்சி உள்ளதா.?
அந்த 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 4 கோடி ரூபாய் பண விவகாரத்தை மீண்டும் மீண்டும் ஊடகத்தில் காட்டுவது வேதனையாக உள்ளது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மதுரையில் கொல்லப்பட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துள்ளார்கள் இந்தச் செய்திகள் எல்லாம் இருக்கும்போது பொய் செய்திகளை மட்டும் ஊடகத்தினர் பரப்புவதற்கு காரணம் என்ன?.
இன்று சிபிசிஐடி அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பணம் எவ்வாறு வந்தது என கேள்வி கேட்டார்கள், பணத்துக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்தேன். நான் திருநெல்வேலி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன் யாரோ தொடர்வண்டியில் எடுத்துச் சென்றதற்கு நான் பொறுப்பாக முடியுமா?.
எனக்கு தெரியாமல் ஹோட்டலில் வேலை பார்த்தவர் தவறு செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா… எனது மகன் என்னை பார்க்க தான் வந்தார், விசாரணைக்காக வரவில்லை. மீண்டும் விசாரணைக்கு அழைக்கவில்லை என தெரிவித்தார். ஊடகங்களில் நல்ல தரமான செய்திகளை போட வேண்டும் எனத் தெரிவித்தார்.