உத்தர பிரதேசத்தில். கன்வர் யாத்திரையையொட்டி, சாவன் மாதம் முழுவதும் பக்தர்கள் செல்லும் பாதையில் இறைச்சிக் கடைகளை மூட அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கன்வர் யாத்திரையையொட்டி பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ஹரித்வாருக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள், கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுத்துவருவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கன்வர் யாத்திரை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெறுவதால், பக்தர்கள் காவடியை தூக்கிச் செல்லும் வழித்தடத்தில் இறைச்சிக் கடைகளை மூட உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.
மேலும், உணவக உரிமையாளர்கள் தங்களது பெயர் பலகையை கடையின் முகப்பில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தியது.
இதேபோல உத்தரகண்ட், மத்திய பிரதேச அரசுகளும் அறிவித்தன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறைச்சிக் கடைகளை மூடும் உத்தர பிரதேச அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், கடைகளில் வியாபாரம் செய்யப்படும் பொருட்களின் விவரத்தை மட்டும் முகப்பில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.