ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு கடந்த 1966-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார்.
ஏறத்தாழ 58 ஆண்டுகளாக நீடித்த இந்தத் தடையை மத்திய அரசு தற்போது விலக்கிக் கொண்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், தேசத்தைக் கட்டமைப்பதிலும், சமூக சேவையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 99 ஆண்டுகளாக அயராது பாடுபடுவதாக கூறினார்.
மேலும், அரசியல் ஆதாயம் கருதியே அப்போதைய காங்கிரஸ் அரசு எவ்வித அடிப்படையுமின்றி, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் பங்கேற்க தடை விதித்ததாக சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.
தற்போது இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.