அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகமே உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் 78 வயதான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில், 81 வயதான தற்போதைய அதிபர் ஜோ பைடன், போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 4 நாட்கள் சிகாகோவில் நடக்கவிருக்கும் ஜனநாயக கட்சி கட்சி மாநாட்டில் ஜோ பைடன் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
கடந்த மாதம், தேர்தல் தொடர்பான முதல் நேரடி விவாத நிகழ்ச்சியில், டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறியதை உலகமே பார்த்தது.
இதனையடுத்து, அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, ஜனநாயக கட்சிக்குள் பைடனுக்கு எதிர்ப்பு கிளம்பியது. முதுமை காரணமாக ஜோ பைடனை போட்டியில் இருந்து விலகுமாறு பெரும்பாலான ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புக்களிலும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலக வேண்டுமென்றே பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனாலும் போட்டியில் இருந்து விலகுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் ஜோ பைடன். இந்நிலையில் தான், கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோ பைடன், போட்டியில் இருந்து ஒதுங்குவதாகவும் , அவருக்குப் பின் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதிபர் வேட்பளராக தம்மை ஆதரித்த அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்திருக்கும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைக்கவும், தேசத்தை வளர்க்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே கமலா ஹாரிஸுக்கு, பல முக்கிய ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராகப் பணியாற்றிய முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையைப் பெற்றவராவார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் குறைந்த பட்சம் 300 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே அதிபர் வேட்பாளர் பட்டியலில் ஒருவர் இடம் பெறமுடியும்.
மேலும் கட்சியில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென்றால் ஒருவர் 1976 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கெனவே , அதிபர் பைடனுக்கு 3896 பிரதிநிதிகளின் ஆதரவு இருந்தது. தற்போது , கமலா ஹாரிஸுக்கு அதிபர் பைடன் தனது ஆதரவை வழங்கினாலும் , ஜோ பைடனுக்கு ஆதரவு அளித்த பிரதிநிதிகள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்களோ அவரே அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக முடியும்.
ஆகவே ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஜனநாயக கட்சியின் மாநாட்டில் தான் அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் முறைப் படி அறிவிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் கமலா ஹாரிஸ் தான் தனக்கு போட்டியாளர் என்றால் எளிதில் வெற்றி பெற முடியும் என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒருவர் மறுதேர்தல் போட்டியில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1968 ஆம் ஆண்டில் அதிபர் லிண்டன் ஜான்சன், இரண்டாவது முறையாக போட்டியிடவில்லை. அதுவும், அப்போதைய அதிபர் லிண்டன் ஜான்சன் தாம் போட்டியில் இல்லை என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
ஆனால் ஜோ பைடன் கதை வேறு. மீண்டும் போட்டி என்று களத்தில் இறங்கிய பின் , கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியிருக்கிறார்.