பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக 6 லட்சத்து 21 ஆயிரத்து 924 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீட்டில் 12.9 சதவீத தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய ஆயுத படையை வலுப்படுத்துவதற்காக செலவிடப்படும் என்றும், பாதுகாப்பு துறைக்காக உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 518 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன்மூலம் தற்சார்பு இந்தியா திட்டம் வலுபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எல்லையோர கிராமங்களில் சாலைப் பணிக்காக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல மத்திய பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா,
பொதுமக்களுக்கு ஆதரவான தொலைநோக்குப் பார்வைகொண்ட பட்ஜெட்டின் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் வேகம் அதிகரிப்பதாக எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.