“இந்திய ராணுவ வீரர்களின் உழைப்புக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ராணுவத்தின் சார்பில் சென்னை பெருங்குடியில், கார்கில் போர் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது, இசை குழுவினர் சார்பில் இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. அத்துடன், கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் குறும்படமும், கார்கில் போர் பற்றிய வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
மேலும், தேசிய மாணவர் படை சார்பில் பியானோ வாசித்தல், இசை, நாடகம் , நடனம், பாடல், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டி விருதுகளை வழங்கினார்.
பின்னர், விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்திய ராணுவத்தினரோடு போராடுவது சாதாரண விஷயம் இல்லை என்பதை ராணுவத்தினர் நிரூபித்துள்ளார்கள்” என்றார்.
நமது இராணுவம் கட்டமைப்பு ரீதியாக வலுப்பெற்றுள்ளது என்றும் 25 ஆண்டுகளில் நமது ராணுவம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர் பெருமையுடன் கூறினார்.
மேலும், நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேசம் வழங்கும் நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறை வளர்ச்சி பெறுகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்தார்.