பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 320 பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
“இந்த பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் என மொத்தம் 500 பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தொகுப்பூதிய ஆசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி அவர்களை பணியிலிருந்து திமுக அரசு நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைவிடுத்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, “மாணவர்களின் நலன் கருதி பழங்குடியின பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.