டெல்லியில் மழை வெள்ளம் புகுந்தததில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முறையான பாதுகாப்பு இல்லாததே மாணவர்கள் உயிரிழக்க காரணம் என்பது தெரியவந்துள்ளது.
டெல்லியில் பருவ மழையால் நகரமெங்கும் தண்ணீர் தேங்குவது தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. டெல்லியின் மழைநீர் வடிகால் திட்டம் கடந்த 1976ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டது.
இத்தனை ஆண்டுகளில் டெல்லியின் மக்கள் தொகை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் டெல்லியில் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப மழை நீர் வடிகால் வசதிகள் முறைப்படி, மேம்படுத்தப் படவில்லை. இதனால், பருவ மழை காலங்களில் டெல்லியில் மழைநீர் வடியாமல் வெள்ளம் பெருக்கெடுத்து தலைநகரையே புரட்டி போட்டுவிடுகிறது.
கடந்த ஜூலை 28ம் தேதி டெல்லியில் வரலாறு காணாத பெரும் மழை கொட்டித் தீர்த்தது. அன்று மதியம் இரண்டரை மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள் மட்டும் 148.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது ஒரே நாளில் 228 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. 88 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் டெல்லியில் இப்படி மழை பெய்துள்ளது. முன்னதாக 1936ம் ஆண்டு தான் ஒரே நாளில் 235 மில்லிமீட்டர் மீட்டர் மழை பெய்துள்ளது. டெல்லி மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
மத்திய டெல்லியில் பழைய ராஜேந்திர நகரில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை பகுதியில் பெருக்கெடுத்த மழைநீரால் அங்கிருந்த Rau’s IAS Study Circle என்ற ராவ் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்திலும் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிவில் சர்வீசஸ் பயிற்சி மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ்த் தளத்தில் தான் தேர்வுக்கு தயாராவதற்கான நூலகம் இருக்கிறது. எனவே 80 சதவீத மாணவர்கள், நூலகத்தில் தான் இருந்துள்ளனர் . திடீரென்று பலத்த மழைபெய்ததால் அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் , மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி, ஐஏஎஸ் கனவுடன் இருந்த தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் ஆகிய மூன்று பேர் மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். ஸ்டோர் ரூம் என்று தீயணைப்புத் துறையினரிடம் அனுமதி வாங்கி விட்டு , விதிமுறைகளை மீறி நூலகம் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விதி மீறலில் ஈடுபட்டு, 3 மாணவர்கள் பலியாக காரணமான ராவ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அதே பகுதியில் உள்ள ஐஏஎஸ் குருகுல், சாஹல் அகாடமி, புளூட்டஸ் அகாடமி உட்பட 13 “சட்டவிரோத” பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பழைய ராஜேந்திர நகர் மற்றும் முகர்ஜி நகர் பகுதிகள் சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களுக்குப் பெயர் பெற்றவை. இந்தப் பகுதியில் மட்டும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவுகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துவருகிறார்கள். ஆனாலும் இந்த மாதிரி மையங்களில் போதிய இடவசதியோ, தகுந்த பாதுகாப்பு அமைப்போ இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே , இந்த பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி , ஒரு பயிற்சி மையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் மாணவர்கள் கூரையில் இருந்து வெளியே குதித்து, உயிர் பிழைத்தனர். எனினும், பல ஊழியர்கள் காயமடைந்தனர்.
குடிமை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்களின் புகலிடமாக இருக்கும் இந்தியாவின் சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்கள், அறிவுத்திறன் மிக்க மாணவர்களுக்கு ஆபத்து மிக்க புதைகுழிகளாக மாறிவிட்டன.
புற்றீசல் மாதிரி தொடங்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சி மையங்களில், ஒன்றுக்கு ஒன்று தொழில் போட்டியில் ஈடுபடுவதால் அடிப்படைத் தேவையான உயிர் பாதுகாப்பில் கோட்டை விட்டு விடுகின்றன.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற கனவுகளோடு, கூடுதல் பயிற்சி எடுக்க வரும் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதற்கு இடமாக, பெரும்பாலான பயிற்சி மையங்கள் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாத கட்டிடங்களில் செயல்படுகின்றன.
மாணவர்கள் பாதுகாப்பு குறித்த அக்கறை இல்லாமல் அலட்சியமாகவே இத்தகைய பயிற்சி மையங்களை அதன் உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர்.
பயிற்சி மையங்களுக்கான சரியான விதிமுறைகளுடன் கூடிய தீவிர நடவடிக்கை பின்பற்றப்படாதவரை , நாளைய இந்தியாவின் அறிவுத்திறன் மிக்க மாணவர்களின் உயிரிழப்புக்களைத் தடுக்க முடியாது என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.