வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து, வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தில் 2009ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஜனவரியில் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடித்தார்.
1971ம் ஆண்டு வங்க தேச சுதந்திரப்போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018ம் ஆண்டு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து, வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
கடந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கிய போராட்டங்கள், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறியது.
இதற்கு, திரையுலக நட்சத்திரங்கள், பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதரவு கிடைத்தது. ராப் பாடல்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் மூலமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன.
பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை நிராகரித்த, போராட்டகாரர்கள் “மார்ச் டூ டாக்கா” திட்டத்தை அறிவித்தனர்.
வங்க தேசத்தின், 39 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் , 20 அவாமி லீக் கட்சியின் மாவட்ட அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் எல்லாம் சூறையாடப் பட்டன. ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும், அவாமி லீக் கட்சியினருக்கும் மோதல்கள் வெடித்தன.
வங்கதேச அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப் பட்டன. இதுவரை நடந்த போராட்ட வன்முறைகளில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நாடு தழுவிய காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. நாடெங்கும் பொது விடுமுறை அறிவிக்கப் பட்டதோடு , இணைய சேவையையும் முடக்கப்பட்டன.
இதன் உச்சகட்டமாக போராட்டக் காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டதால், 76 வயதான வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டாக்காவை விட்டு வெளியேறி, இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார்.
பிரதமரின் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள், வங்க தேசத்தின் தந்தை என போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனிடையே, தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய வங்க தேச ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் பிரதமரின் ராஜினாமாவை உறுதிப்படுத்தி இருக்கிறார். நாட்டை நிர்வகிப்பதற்காக இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், வன்முறைப் போராட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை 4,096 கிலோமீட்டர் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் ‘உயர் எச்சரிக்கை’ விடுக்கப் பட்டுள்ளது.. இந்திய எல்லைப் பாதுகாப்பை மதிப்பீடு செய்வதற்காக எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.