ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை கதுவா காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ₹5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதுவா மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் உள்ள மல்ஹர், பானி மற்றும் சியோஜ்தார் ஆகிய இடங்களில், தீவிரவாதிகளின் ஓவியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது.
தீவிரவாதிகள் குறித்து நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கதுவாவின் பத்னோட்டா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் பிற அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.