சென்னை, விழுப்புரம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
குறிப்பாக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் மிகுந்த அவதி அடைந்தனர். மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், ‘ஜவகர் பஜார், வெங்கமேடு, தாந்தோணி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இப்பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில் குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.