ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து அங்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தனர்.
அந்த வகையில், செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
முதல்கட்ட வாக்குப்பதிவையொட்டி, வரும் 27-ஆம் தேதியும், 2-ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதியும், 3-ஆம் கட்ட தேர்தலுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தினம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் மூன்றுகட்டங்களாக நடைபெறுவதால், வேட்பு மனு தாக்கல் மீதான பரிசீலனை வரும் 28-ஆம் தேதி, செப்டம்பர் 6 மற்றும் 13 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற முறையே ஆகஸ்ட் 30, செப்டம்பர் 9 மற்றும் 17 ஆகியவை கடைசி தினம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.