பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோயில்களில் நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சிறப்புரையாற்றினர்.
அதில், 6 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும், பல்வேறு கோயில்களில் திருப் பணிகளை செய்துவிட்டே பழனியில் மாநாடு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 789 கோடி ரூபாய் செலவீட்டில் முருகக் கடவுளின் அறுபடை வீடுகளிலும் 251 திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதைத்தொடர்ந்து ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ்பேசும் கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முருகனடியார்கள், சமயச் சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ள நிலையில், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர்,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த லட்சக் கணக்கானோரும் பங்கேற்க உள்ளனர்.
அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால் பழனி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.