தமிழகத்தில் பாஜக – அதிமுக தலைவர்களிடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டு அதிமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு பாஜக மாநிலத் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்ததை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்டோர், அதிமுகவினர் மீது வழக்குப்பதியக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரத்தில் அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆர்த்தி ராஜ் தலைமையில் கலந்து கொண்டவர்கள் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.