அருணாச்சல பிரதேசத்தில் ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்து இந்தியா முதன்முதலாக ஆய்வு மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் 1,080 கிலோமீட்டர் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில், அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் உள்ளன.
இது குறித்து இதுவரை எந்த ஆய்வுகளோ கணக்கெடுப்புக்களோ நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்தியா முதன்முறையாக இந்த ஏரிகள் குறித்து விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைமையிலான தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (GLOF) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மற்றும் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்களில், சீன எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகளில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தைத் தணிப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த பனிப்பாறை ஏரிகளை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
அருணாச்சல பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய மலையேறுதல் நிறுவனத்தின் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து கணக்கெடுப்பை நடத்துகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் திபாங் ஆகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளும் தெற்கு திபெத்தின் எல்லையில் அமைந்திருக்கின்றன.
ஆனால், இந்த தெற்கு திபெத் பகுதிகளைச் சீனா உரிமை கொண்டாடுகிறது. எனவே இந்தியாவின் இந்த கணக்கெடுப்பு புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
யார்லுங் சாங்போ ஆற்றில், சீனா ஒரு பெரிய அணை கட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த அணை உடையக்கூடிய அபாயத்தில் உள்ளது.
2018ம் ஆண்டில் திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், வெள்ளத்துக்கும் சீனாவின் இந்த அணை கட்டுமானம் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள அடிவாரப் பகுதிகளில் சீன உள்கட்டமைப்பு திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது
இந்தச் சூழலில், அருணாச்சல பிரதேசத்தின் 27 மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அதில் தவாங் மற்றும் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள தலா மூன்று அதிக ஆபத்துள்ள பனிப்பாறை ஏரிகளை முதலில் இந்தியா ஆய்வு செய்ய உள்ளது.
14 பேர் கொண்ட நிபுணர் குழுவின் ஆரம்பப் பணிகள் 12 நாட்களுக்குள் முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த பனிப் பாறை ஏரிகள் ஆய்வு சீனாவின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பது உண்மை.