மேற்குவங்க அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக கோரி மாணவர்கள் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல்துறையின் அராஜகப்போக்கைக் கண்டித்து மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கொல்கத்தா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அக்னிமித்ரா பால், பகுதி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.