உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டுவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கும் ரஜினிகாந்தின் பேச்சும், அதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அரை நூற்றாண்டு கால அனுபவம் கண்ட துரைமுருகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார்.
அப்போதிலிருந்து திமுகவிற்குள்ளாகவே துரைமுருகன் மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கின. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் துரைமுருகனை இடைக்கால முதலமைச்சராக்கலாம் என்ற குரல் எழுந்த நிலையில், அதற்கு எதிராக ஒட்டுமொத்த அமைச்சர்களும் உதயநிதியை துணைமுதலமைச்சராக்க வேண்டும் என குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் பழைய மாணவர் துரைமுருகன் எனவும், அவரை சமாளிப்பது சாதாரண காரியம் கிடையாது என பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தர பரஸ்பர பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது
அமைச்சர் துரைமுருகன் குறித்து தான் பேசமுடியாததை ரஜினிகாந்தை வைத்து பேசியிருப்பதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகனை இடைக்கால முதலமைச்சராக்க வேண்டும் என்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாக துரைமுருகன் வசமிருக்கும் இலாக்காக்களில் ஒருசிலவற்றை பறிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டினால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் எந்தவித விமர்சனமுமின்றி துணைமுதலமைச்சராகலாம் என்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகங்கள் தான் இவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.