மக்காச்சோளத்தில் இருந்து எத்தனாலைத் தயாரிப்பதற்கான முயற்சியைத் தீவிரமாக்கி இருக்கிறது இந்தியா. இதன் காரணமாக, மக்காச்சோளத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தானியங்களின் ராணி என்று அழைக்கப் படும் மக்காச் சோளம், கோதுமைக்கு அடுத்து முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் 10 கோடி ஹெக்டேர் பரப்பளவில், ஆண்டுக்கு மூன்றரைக் கோடி டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் பெரும்பாலும் கால்நடைத் தீவனத்துக்குத்தான் பயன்படுகிறது. குறிப்பாக, கோழித் தீவனத்துக்கு மக்காச்சோளம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோள உற்பத்தி இல்லையென்றால், கோழிப்பண்ணைத் தொழிலே முடங்கிவிடும். அந்த அளவுக்கு கோழித் தீவன உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது மக்காச்சோளம்.
வழக்கமாக கோழி மற்றும் ஸ்டார்ச் தொழில்கள் இந்தியாவின் சோள உற்பத்தியில் சுமார் 36 மில்லியன் டன்களைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோலில் கலப்பதற்காக கரும்பு அடிப்படையிலான எத்தனாலில் இருந்து விலகி, சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலின் கொள்முதல் விலையை ஜனவரி மாதம் இந்தியா உயர்த்தியது.
எத்தனால் டிஸ்டில்லரிகள் சோளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து அந்நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் முதல் 7 மில்லியன் டன் சோளம் தேவைப்படுகிறது.
கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், பெட்ரோலில் உள்ள எத்தனாலின் பங்கை 2025-26 ஆம் ஆண்டிற்குள் 13% இல் இருந்து 20 சதவீதமாக அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இலக்கை அடைய, இந்தியாவிற்கு 10 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சோளம் அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியை 3 பில்லியன் லிட்டராக அதிகரிக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 8 மில்லியன் டன் சோளம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மக்காச் சோளத்தின் இறக்குமதி தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்காச் சோளத்தின் விலை கடுமையாக கூடியிருக்கிறது.
2 மில்லியன் முதல் 4 மில்லியன் மெட்ரிக் டன் சோளத்தை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, இந்த ஆண்டு 4. 50,000 டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தியா 1 மில்லியன் டன்கள் மக்காச் சோளத்தை இறக்குமதி செய்யவிருப்பது தெரிய வருகிறது. முக்கியமாக மரபணு மாற்றப்படாத சோளத்தை விளைவிக்கும் மியான்மர் மற்றும் உக்ரைனில் இருந்து, இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
2024ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் சோள இறக்குமதி 5 லட்சத்து 31 ஆயிரத்து 703 டன்னாக அதிகரித்திருக்கிறது. அதே சமயம் இந்தியாவின் மக்காச் சோளத்தின் ஏற்றுமதி கடந்த ஆண்டு இருந்ததை விட 87 சதவீதம் குறைந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மக்காச் சோளத்தின் தேவை அதிகரித்து வருவதால், மியான்மரில் மக்காச்சோளத்தின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு சுமார் 270 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவுக்கான உக்ரைனின் மக்காச் சோள ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
உற்பத்திச் செலவில் நான்கில் மூன்று பங்கு தீவனத்துக்குச் சென்று விடுவதால், மக்காச்சோளத்தின் விலைஏற்றம் கோழி உற்பத்தி தொழிலை கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிக சோள இறக்குமதியை வரியே இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்றும், மரபணு மாற்றப்பட்ட GM சோளத்தை விளைவிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய கோழி வளர்ப்போர் சங்கம் மற்றும் கூட்டு கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது.