1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்குப் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்திருக்கிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பை வலிமைபடுத்துவதையும், தேசத்தின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தியக் கடற்படைக்கு 70,000 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஏழு மேம்பட்ட போர்க்கப்பல்களைத் தயாரிக்கவும் மற்றும் ராணுவத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பில்,1,700 புதிய நவீன ரக பீரங்கிகள் தயாரிப்பது உள்ளிட்ட பல பாதுகாப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட் 17 பிராவோ (Project 17 Bravo)என்ற திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
ஏற்கெனவே ,Mazagon Dockyards Limited (MDL) என்ற நிறுவனம் நான்கு போர்க்கப்பல்களை உருவாக்கி வருகிறது. மற்றும் Garden Reach Shipbuilders and Engineers (GRSE) என்ற நிறுவனம் 3 போர்க் கப்பல்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், (Project 17 Bravo) ப்ராஜெக்ட் 17 பிராவோவுக்கான ஏலத்தில் MDL, GRSE, கோவா ஷிப்யார்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட வகை நான்கு கப்பல் கட்டும் நிறுவனங்கள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், பீரங்கிகள் மற்றும் காலாட்படை போர் வாகனங்கள் உட்பட ராணுவத்தின் கவச வாகனங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்திய இராணுவம், கடந்த 10 ஆண்டுகளில் தனது கவசப் படைகளைக் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், இது வரை பயன்படுத்தி வந்த ரஷ்யாவின் T-72 பீரங்கிகளுக்குப் பதிலாக Future Ready Combat Vehicles (FRCVs) என்ற அழைக்கப் படும்,அதிநவீன போர் வாகனங்களை வாங்குவதற்கு மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான ஏலத்தில் Bharat Forge (பாரத் ஃபோர்ஜ்) மற்றும் Larsen & Toubro (லார்சன் & டூப்ரோ) போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிய வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக சீனா பலவகையான நடவடிக்கைகளைப் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலும் முன்னெடுத்து வருகிறது.
சீனா தனது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகிய நாட்டின் உள்கட்டமைப்பை இராணுவ பயன்பாடுகளுக்காக மேம்படுத்தியுள்ளது. மேலும் சீனா தனது கடல் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.
இலங்கையில் உளவு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் ஒரு விமான ஓடுதளம் நிக்கோபார் தீவுகளில் கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள்,மாலத்தீவில் நீருக்கடியில் நிலப்பரப்பு மேப்பிங் செய்யும் உளவுக் கப்பல் என இந்தியாவைக் கண்காணிக்கும் முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது
அரேபிய கடலில் இந்தியாவின் கடல் எல்லையோரத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், சீனா தனது மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் (PLAN) இராணுவத் தளத்தை ஜிபூட்டியில், எரிபொருள் நிரப்பும் வசதியிலிருந்து பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பாக மாற்றியுள்ளது.
இந்தப் பின்னணியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்
The Defence Acquisition Council’ கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் 1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.