சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்த்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது : “தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில், உலக நாடுகள் பலவற்றிலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைப்போம் என்று, பாரதப் பிரதமர் மோடிபாஜக பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, பிரதமரின் சீரிய முயற்சியால், முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாச்சார மையம், சிங்கப்பூரில் அமையவிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது.
இந்த மையம், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே ஒரு கலாச்சாரப் பாலமாக அமையும். தமிழ் மொழியின் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் செழுமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று, தமிழின் பெருமையைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து துணையாக இருக்கும் பாரதப் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், பாஜக சார்பிலும், மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.