தேர்தலை மனதில் கொண்டு, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கப்படுவதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் வஉசி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது:
எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களை விட விளம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு வழங்கியிருக்கிறார்கள்,அதை தொடக்க முதலே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்றார்.
நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதால் விஜய் யை கண்டு திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அப்படி அனுமதி கொடுத்து விட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தற்போது மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜய்யை கண்டு திமுக அஞ்சுவதாக தோன்றுகிறது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.