சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார்.
புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, முதலீடு செய்ய முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த வட்டமேசை மாநாட்டில் பிளாக்ஸ்டோன் சிங்கப்பூர், டெமாசெக் ஹோல்டிங்ஸ், எஸ்டி டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர், சிங்கப்பூர் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்குப் பின் ஒரே கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் விமானத் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுவருவதாக தெரிவித்தார்.
விமான நிலைய பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்தியாவில் தொழில் தொடங்க தாராளமாக முன்வரலாம் என தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
முன்னதாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னத்தை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பாக அவருடன் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். அவருக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் நினைவுப் பரிசு வழங்கி, வழியனுப்பிவைத்தார்.