சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் தன்னிச்சையாக நடத்த முடியும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் ஜனத்திற்கு பிரத்யேக ஆதாரம் கிடைத்துள்ளது.
பீகார், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தன்னிச்சையாகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கும் நிலையில்,தமிழக அரசு மட்டும், மத்திய அரசால் மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என கூறியிருப்பதோடு, அது தொடர்பான தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் குலசேகரன் தலைமையிலான ஆணையத்திற்கும் உரிய கால அவகாசத்தை வழங்க மறுத்ததாக திமுக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையா ? மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியுமா ? என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில்,அது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்திருக்கும் பதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலம் அனுப்பியிருக்கும் பதில் கடிதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனம் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின் மூலம் தமிழக அரசின் முகத்திரை கிழிந்திருப்பதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் வாதம் வலுப்பெற்றிருப்பதாகவும் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.