கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாண்டியா மாவட்டம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சிலர் ஊர்வலத்தை நோக்கி கற்களையும் காலணிகளையும் வீசியதாக தெரிகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டாளர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது இருசக்கர வாகனங்களையும் துணிக் கடைகளையும் சிலர் தீ வைத்து எரிக்க முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். இருப்பினும், இந்த வன்முறையில் ஆறு கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 13 கடைகள் கல் வீச்சில் சேதமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. வன்முறை காரணமாக நாகமங்கலா நகரில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் அசோகா, காங்கிரஸ் அரசின் வாக்கு வங்கி அரசியல், சார்புத்தன்மை மற்றும் ஒருசாராரை திருப்திப்படுத்தும் அரசியல் தான் வன்முறைக்கு நேரடி காரணம் என விமர்சித்தார்.