டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் தனித்தனியாக கைது செய்தன.
ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீண்டகால சிறைவாசம் சுதந்திரத்தை அநியாயமாக பறிப்பதற்கு சமம் என்று கூறிய நீதிபதிகள், 10 லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்த அறிவுறுத்தி, கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அந்த வகையில் ஜாமீன் காலத்தில் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும், விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.
மேலும், கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி உஜ்ஜல் புயான், சிபிஐயின் நடவடிக்கையால் அமலாக்கத் துறை வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்.