தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாத்ரு வான் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் பங்கேற்று மரக்கன்று நட்டார். அப்போது பேசிய அவர், இந்து சமூகம் என்பது இந்த நாட்டின் பாதுகாவலர் என தெரிவித்தார்.
இந்து மதம், அனைவரின் நலனையும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், தாராள குணத்துடனும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தெரியாத பலர், இன்று அதன் பெருமைகள் குறித்தும், நோக்கங்கள் குறித்தும் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தின் விரிவான வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்து மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பது தற்போது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழுமியங்கள், சுய விழிப்புணர்வு மற்றும் குடிமை ஒழுக்கம் ஆகிய ஐந்து முக்கிய கொள்கைகளை உள்ளடக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று பகவத் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும், குடும்ப மதிப்புகளின் வீழ்ச்சி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
குடும்பங்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவும் தவறாமல் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பகவத் வலியுறுத்தினார், மேலும் குடும்பங்கள் வாரத்திற்கு ஒருமுறை கூடி மதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.
விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சஞ்சய் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.