தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க சிறப்பு புலனாாய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் குடிசைவாசிகளுக்கு மாற்று இடமாக வழங்கப்பட்டுள்ள பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், பெரும்பாக்கத்தில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறப்பு புலனாாய்வுக் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த குழுவை கண்காணிப்பார் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.